இந்திய முப்படைத்தளபதி மரணம்; டெல்லி சென்றார் சவேந்திர சில்வா
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்தியாவிற்குச் சென்றுள்ளார்.
அதன்படி, சவேந்திர சில்வா மற்றும் அவரது மனைவி , இராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேருடன் இன்று அதிகாலை புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார்.
இலங்கை ஆயுதப் படைகளின் உண்மையான நண்பராகவும், இராணுவத் தலைவராகவும் தனது நினைவைப் போற்றும் அவர், அவரது முதிர்ந்த இராணுவ அறிவு, கட்டளை, தலைமைத்துவ பண்புகள், தொலைநோக்குப் பணி மற்றும் இணக்கமான பணி உறவு ஆகியவை ஆற்றல்மிக்க தொழில்முறை மற்றும் புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கும் எனவும் தனது இஅரங்கலில் அவர் குறிப்பிட்டார்.
விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகள் இராணுவ மரியாதையுடன் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.
கடந்த புதன்கிழமை நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்த இராணுவ ஹெலிகொப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இந்திய முப்படைகளின் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.