நாடாளுமன்ற பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் ; குற்றம் சாட்டும் சஜித்
நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து மறைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ஊழியர் ஆலோசனைக் குழு இன்று கூடி இந்த விசாரணை அறிக்கை குறித்து விவாதிக்கவுள்ள போதிலும், இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த அறிக்கை வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

ஆலோசனைக் குழு கூட்டம்
"பாலியல் துன்புறுத்தல் தொடர்பான இந்த அறிக்கையை உறுப்பினர்கள் முறையாகப் படித்துப் பார்த்தால் மாத்திரமே, ஆலோசனைக் குழு கூட்டத்தில் இது குறித்து ஆக்கபூர்வமாக விவாதிக்க முடியும்.
ஆனால், இந்த அறிக்கை உறுப்பினர்களிடமிருந்து மறைக்கப்படுவது ஏன்?" என அவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெறும் போது, அந்த அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் சிலர் உயர் அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.