பாலியல் தொல்லைகள்; ஆசை ஆசையாக வாங்கிய பதக்கங்கங்களை வீசி எறிய தயாராகும் வீராங்கனைகள்
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர். கடந்த மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்த பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பதக்கத்தை நதியில் வீசும் சம்பவம்
அதேவேளை போராடி வென்ற பதக்கத்தை நதியில் வீசும் சம்பவம் அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது. பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி, 1960 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
இதன்மூலம் அமெரிக்காவில் இனவெறி நீங்கும் என்றும், மாற்றம் ஏற்படும் என்றும் நம்பினார். ஆனால், கறுப்பினத்தவர் என்ற காரணத்திற்காக உணவகத்தில் தனக்கு உணவு பரிமாறகூட பணியாளர்கள் தயக்கம் காட்டியதைக் கண்ட முகமது அலி, தான் வென்ற தங்கப்பதக்கத்தை ஓஹியோ நதியில் வீசினார்.
இந்த நிலையில் குத்துச்சண்டை ஜாம்பவானின் இந்த செயலை பின்பற்றியே, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்துள்ளதாக பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.