வட மாகாணத்தில் கடும் வறட்சி ; தாகம் தீர்க்கும் கடற்படையினர்
வட மாகாணத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு இலங்கை கடற்படையினர் குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், நெடுந்தீவின் இயற்கை சூழலையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள வனவிலங்குகள்
கடும் வறட்சி காரணமாக நெடுந்தீவில் உள்ள நீர்நிலைகள் வற்றியுள்ளதால், வனவிலங்குகள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.
நெடுந்தீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் வசப நிறுவனத்தின் ஊடாக போனி குதிரைகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நெடுந்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள வெள்ளைப் பகுதியில் வாழும் போனி குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கும், தீவின் இயற்கை அழகையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்கும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாண மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தீவுப் பகுதிகளில் கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தமான குடிநீரை தினசரி வழங்கும் பணியும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.