காட்டு பகுதிக்கு தீ வைத்த ஏழு இளைஞர்கள் கைது
கேகாலை, ரம்புக்கனையில் உள்ள அலகல்ல வனப்பகுதியில் நேற்று (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ரம்புக்கனை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்றபோது, தீ வைப்புச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கிராம மக்களால் தடுத்து வைக்கப்பட்ட 7 பேர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணை
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சந்தேக நபர்கள் அலகல்ல கண்டா வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இந்த தீ வைப்பு சம்பவத்தை நடத்தியது தெரியவந்துள்ளது.
அதன்படி, சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 மற்றும் 19 வயதுடையவர்கள் என்பதுடன், கடுகன்னாவ, பிலிமத்தலாவ, ஹன்தேஸ்ஸ மற்றும் பலான பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.