பசிலின் வேண்டுகோளை நிராகரித்த சிரேஸ்ட அமைச்சர்கள்!
நிதியமைச்சராக பதவியேற்ற பின்னர் அரசாங்கத்தில் தனது அதிகாரத்தை பலப்படுத்தியுள்ள பசில் ராஜபக்ச உள்ளுராட்சி தேர்தல்களை நடத்தவேண்டும் என வேண்டுகோள்விடுத்த நிலையில் சிரேஸ்ட அமைச்சர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.
நெருக்கடியான விவகாரங்களிற்கு மத்தியில் அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ள தயாரில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்தவருடம் இடம்பெறலாம் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் உள்ளுராட்சி தேர்தல்களே முதலில் இடம்பெறவேண்டும் என தெரிவித்துள்ள பசில்ராஜபக்ச, இதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை அடிமட்டத்தில் பலப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் டொலர் நெருக்கடி காரணமாக நாடு குழப்பநிலையில் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சர்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் எரிபொருள்நெருக்கடிக்கு மத்தியில் நாடுஎந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாரில்லை,தேர்தலை சந்தித்தால் கட்சி தன்னை மேலும் பலவீனப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ஐக்கியமக்கள் சக்திஉட்பட எதிர்கட்சிகள் தங்களிற்குள் காணப்படும் நிச்சயமற்ற நிலை மற்றும் பிளவு காரணமாக தேர்தலை தற்போதுசந்திக்க தயாரில்லை என குறிப்பிட்டுள்ளன.
சமீபத்தில் இடம்பெற்ற பொதுஜனபெரமுனவின் கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள தயாரா என பிரதமர் விடுத்தசவாலை எதிர்கட்சிகள் தெளிவில்லாமல் ஏற்றுக்கொண்டன.
எனினும் இவை வெறும் வார்த்தைகள் மிரட்டல்கள் எந்த கட்சியும் தற்போது -எந்தவேளையிலும் தேர்தலை சந்திக்க தயாரில்லை, என சிரேஸ்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயம் உள்ளுராட்சி தேர்தல்கள் இந்த வருடம் இடம்பெறுவது சாத்தியமில்லை-அடுத்தவருடம் இடம்பெறலாம் எனவும் ,மக்களும் வாக்களிக்க தயாராகவேண்டும் என்றும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.