மக்களுக்கு பாதுகாப்பு செயலாளர் விடுத்த எச்சரிக்கை!
ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு எனினும் ஆக்ரோஷமாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை
சில குழுக்கள் சட்டத்தை மீறி போராட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவ்வாறானவர்கள் மீது சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“இது தொடர்பில் விமர்சனங்கள் இருந்தாலும், மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பும் கடமையாகும் எனவும் அவர் கூறினார்.
இதுபோன்ற போராட்டங்களால் மக்கள் தொந்தரவு செய்யப்பட்டால் , அவற்றைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
காலி முகத்திடலில் போராட்டங்கள் நடத்த முடியாது
உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான அண்மைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் காலி முகத்திடல் இனி போராட்டங்களை நடத்துவதற்கான இடமல்ல என்றும், எனவே அந்த இடத்தில் எவரும் ஆர்ப்பாட்டம் செய்வது சட்டப்பூர்வமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் தளத்தைப் பார்வையிட சுதந்திரமாக செல்லலாம். ஆனால் எதிர்ப்பாளர்களுக்கு மாத்திரமே வரம்பு உள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.