முறுக்கு கடைக்குள் இரகசிய நிலத்தடி இரவு விடுதி ; அதிரடி காட்டிய அதிகாரிகள்
கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில், கடை ஒன்றின் பின்னால் மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலத்தடி இரவு விடுதி ஒன்றை கலால் திணைக்கள அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஒரு தொகை வெளிநாட்டு மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக சட்ட நடவடிக்கை
வெளிப்புறத்தில் முறுக்கு உள்ளிட்ட சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடையாகவே இந்த இடம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, சிற்றுண்டி பொதிகள் வைக்கப்பட்டிருந்த அலமாரியை அகற்றிய பின்னரே, அந்த இடத்தில் இருந்து நிலத்தடி பகுதிக்கு செல்லும் இரகசிய நுழைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வித அரச அனுமதியும் விற்பனைக்கான உரிமமும் இன்றி இந்த இடம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிற நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கலால் திணைக்களம் நடவடிக்கை எடுக்கிறது.