ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்; வெற்றிவாகை சூடிய சிந்து
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் பி.வி.சிந்து, சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோ உடன் மோதினார்.
இதில் சிந்துசிந்துவின் ஆக்ரோஷம், ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே வெளிப்பட்டது. இடதுகை வீராங்கனையான பிங்ஜியவோ-வால், சிந்துவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து எளிதாக வென்றார். இரண்டாவது சுற்றின் தொடக்கத்தில் சிந்து அதிரடியை தொடர்ந்தாலும், பிங்ஜியாவோவும் பதிலுக்கு அதிரடி காட்டினார்.
இரண்டாவது செட்டில் 15-12 என மூன்று புள்ளிகளில் சிந்து முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் சுதாரித்துக்கொண்ட சிந்து அடுத்த 6 புள்ளிகளைப் விரைவாக பெறத்தொடங்கினார்.
இரண்டாவது செட்டை சிந்து 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, 2-0 என்ற நேர் செட்களில் பிங்ஜியவோவை தோற்கடித்தார். இதன்மூலம், பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்று, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னர் , இந்தியாவிற்கு பளூதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.