பெரும்பாலான தொகுதிகளில் அதிரடி காட்டும் சீமானின் கட்சி
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பெரும்பாலான தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்துள்ளது நாம் தமிழர் கட்சி. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, இன்று (மே.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி முடிவுற்றது. இதில் பல இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அமைச்சர்கள் உட்பட பல முக்கிய அதிமுக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
எனினும், மற்ற கட்சிகளில் மக்கள் நீதி மய்யம் மட்டும் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் அக்கட்சி லீடிங்கில் உள்ளது. மதியம் 1 மணி நிலவரப்படி, மொத்தம் 234 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது.
இதில், 147 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 86 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் லீடிங் பெற்றுள்ளது.
இந்த சூழலில், சீமானின் நாம் தமிழர் கட்சி, பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்த் தேசியம் எனும் அடிப்படைக் கொள்கையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி, இளம் தலைமுறை வாக்காளர்களை அதிகமாகவே கவர்ந்துள்ளது. தனித்துவமான அவர்களது அரசியல் பாதையே இதற்கு காரணம்.
வாக்குகளை பொறுத்தவரை திமுக - அதிமுக இடையே தான் சரிக்கு சரி மோதல் நிலவுகிறது. ஒரு எடுத்துக்காட்டுக்கு பார்த்தோமெனில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி 10 வது சுற்று முடிவின்படி திமுக வேட்பாளர் மணிகண்ணன் - 36,897 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இங்கு, அதிமுக வேட்பாளர் குமரகுரு - 35,396 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையேயான வித்தியாசம் 1501. இதே தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புஷ்பமேரி 4,273 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடிக்கிறார்.
அமமுக வேட்பாளர் ராஜாமணி 854 பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சின்னையன் 261 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதில், திமுக, அதிமுக வேட்பாளர்களின் வாக்குகளுடன் ஒப்பிடும் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வாக்கு மிக மிகக் குறைவு. ஆனால், அவர் தான் மூன்றாம் இடம் பிடிக்கிறார்.
இந்த கணக்கு அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை அடுத்த இடங்களையே பிடிக்கின்றன.