தமிழர் பகுதியில் சிக்கிய ”கடற்குதிரை” உள்ளிட்ட கும்பல் ; வாடகை வீட்டில் அரங்கேறிய சம்பவம்
நீண்டகாலமாக தரை மற்றும் கடல் வழியாக மிகவும் நுணுக்கமான முறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (09) இரவு, அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பக்கட்ட விசாரணை
அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் இந்த சோதனையை நடத்தினர். கைதானவர்களில் 'கடற்குதிரை' என அழைக்கப்படும் பிரதான சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
மற்றைய சந்தேக நபரிடமிருந்து 20 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், 5 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கடத்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள், 80 ஆயிரம் ரூபாய் பணம், இலத்திரனியல் தராசு மற்றும் நவீன கைத்தொலைபேசிகள் என்பனவும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 40 வயதுடையவர்கள் ஆவர். இவர்களில் ஒருவர் தலைமுடி வெட்டும் தொழிலில் ஈடுபடுபவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து கடல் மற்றும் தரை வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் காரைதீவு பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு பெற்று, அங்கிருந்தே இந்தக் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்களை வழங்கி விசாரணையைத் திசைதிருப்ப முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்றுப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.