கொழும்பில் காதலால் நடந்த பயங்கரம்
காதல் உறவின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான இரு இளைஞர்களும் யுவதியொருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் முல்லேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், சந்தேகநபர்கள் 15 பேரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லேரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருடன் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சில காலமாக காதல் உறவை வளர்த்துக் கொள்ள முயற்சித்து வந்த நிலையில் அதனை மாணவி நிராகரித்துள்ளார்.
காதல் தொடர்பு
இது குறித்து மாணவன் தொடர்ந்து வற்புறுத்தியதை அடுத்து, இது குறித்து தனது மூத்த சகோதரரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் குறித்த மாணவியின் சகோதரனும் கலந்துகொண்டிருந்த நிலையில் குறித்த மாணவனை சந்தித்து, சகோதரியை தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
பதிலுக்கு, மாணவர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து அவரது நண்பர்கள் குழுவை அந்த இடத்திற்கு வரவழைத்தார். பாடசாலை வளாகத்திற்கு வெளியே, குழு சகோதரர் தரப்பினரைத் தாக்கியது.
மாணவியின் சகோதரர்கள் இருவரையும், சகோதரர் ஒருவரின் மனைவியையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் தாக்கப்பட்ட விதம் கையடக்க தொலைபேசிகள் மற்றும் சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை
தாக்குதலில் காயமடைந்த இரு சகோதரர்களும் பெண்ணும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் முல்லேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 15 பேரை கைது செய்துள்ளனர்.
நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        