நண்பர்களுடன் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!
காலி - ஹிக்கடுவ ஆற்றில் நீராட சென்ற கரந்தெனிய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சஸ்மிக சுதம் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றையதினம் (20-07-2024) மாலை தன்சலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது நண்பர்களுடன் வீட்டிலிருந்து புறப்பட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவ ஆற்றில் குளிப்பதற்காக 9 பேர் சென்றுள்ளதுடன், மாலை 5.30 மணியளவில் 5 பேர் நீரில் மூழ்கினர்.
அவர்களில் 4 பேரை அப்பகுதி மக்கள் மீட்கப்பட்டுள்ள போதும் ஒருவர் காணாமல் போயிருந்தார்.
சஸ்மிக நீரில் மூழ்கி காணாமல் போனதையடுத்து, நேற்றிரவு வரை பொலிஸ் உயிர்காக்கும் படையினரும் பிரதேசவாசிகளும் தேடினர்.
இந்த நிலையில், ஹிக்கடுவ ரயில் பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று (21) காலை மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.