இலங்கையில் அரங்கேறி வரும் மோசடி செயல்கள்! மக்களே அவதானம்
இலங்கையில் கடந்த ஒரு வருடமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், வெளிநாடுகளில் தஞ்சம் கோருவது, ஏதாவது ஒரு வழியில் வேலைத் தேடி செல்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதேவேளை, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செயல்களும் அரங்கேறி வருகின்றன.
இவ்வாறான நிலையில், கடந்த ஜனவரி 4-ம் தேதி இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நீர்கொழும்பு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்து அங்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் சட்டவிரோதமாக புலம்பெயர்வதற்காக 20 பேரிடம் 50 லட்சம் இலங்கை ரூபாயினை வசூலித்திருக்கின்றனர்.
இந்த சந்தேக நபர்கள் சிலாபம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என இலங்கை கடற்படையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைதானவர்கள் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.