இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் சரத் பொன்சேகா!
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, Sarath Fonseka தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினருடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கொழும்பு ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா,
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தம்மை போட்டியிடுமாறு பலர் கோரியுள்ளனர்.
இதன் அடிப்படையில் தேவை ஏற்பட்டால் மற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளேன்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தி மக்களுடன் வாழும் ஒரு அரசியல் கட்சி. மக்களின் கோரிக்கை தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்பது என்றால் அதனை நிராகரிக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு ஊழல்மிக்க அரசியல்வாதிகள் பிரதான காரணம். அவர்களிடம் இருந்து நாட்டின் ஜனநாயகத்தை காத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஊழல்மிக்க அரசியல்வாதிகளிடம் இருந்து நாடாளுமன்றத்தையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொண்டாலும் நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியாது." என தெரிவித்துள்ளார்.