ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்: அரசே பொறுப்பு கூற வேண்டும்! சரத்
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் அரசாங்கம் தொடர்புபட்டிருந்தாலும் இல்லை என்றாலும், நாட்டில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.
இதன் உண்மையான பின்னணியை கண்டு பிடிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்தால் நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூற முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகவியலாளர் சமுதிதவின் இல்லத்திற்கு சென்று அங்கு நிலைமைகளை அவதானித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர் சமுதித அண்மை காலமாக பகிரங்கமாக சில விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். எனினும் இவ்வாறான தாக்குதல்களில் எதிர்க்கட்சிகள் தலையிடும் என்று நாம் கருதவில்லை.
இவற்றில் அரசாங்கத்தின் தலையீடு காணப்பட்டாலும் இல்லை என்றாலும், நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு மக்களை அச்சுறுத்த முயற்சித்த குழுவினர் இதற்கு முன்னரும் நாட்டில் உள்ளனர்.
இவர்களில் அரசியல்வாதிகளும் ஏனையோரும் உள்ளடங்குகின்றனர். அவ்வாறானவர்களே இதில் தலையிட்டுள்ளனர் என்று நாம் கருதுகின்றோம். சமுதிதவிற்கு சார்பான அவருடன் இருப்பதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறது.
இது தொடர்பில் சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறான சம்பவம் இடம்பெற்று, அது தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடையுமெனில் நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் பெருமிதம் கொள்ள முடியாது.
உண்மையை கண்டுபிடிப்பதில் தோல்வியடைக் கூடிய எந்த தடையும் பொலிஸாருக்கு இல்லை. எனவே அரசாங்கம் பொலிஸாருக்கு உரிய பலத்தை வழங்கி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.