சரஸ்வதி பூஜை- ஆயுத பூஜை கொண்டாடுகையில் இதை செய்ய மறக்க வேண்டாம்!
நவராத்திரி விழாவானது உலகெங்கும் வாழும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓர் நிகழ்வாகும். நவராத்திரியின்போது அதாவது ஒன்பது தினங்கள் முறையே முப்பெரும் தேவியரான லட்சுமி, துர்கா, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும். 10 ஆவது நாள் விஜயதசமியாக கொண்டாடுகின்றோம்.
சரஸ்வதி பூஜையை கொலு வைத்திருப்பவர்களும் கொலு வைக்காதவர்களும் கொண்டாடலாம். இப்பண்டிகையை வீட்டில் இருந்தும் தொழில் நடத்தும் இடங்களிலும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை என்றும் வீட்டில் படிக்கும் புத்தகம், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது சரஸ்வதி பூஜை என கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி பூஜையின் முப்பெரும் தேவிகளை கும்பிடும் போது வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் பெற்றிட முடியும். உடல் வலிமையை வெளிப்படுத்தும் சக்தியாக துர்கா தேவியையும், வாழ்க்கைக்கு தேவையான செல்வ வளத்தை நல்க கூடியவராக ஸ்ரீமகாலட்சுமியையும், அறிவையும் ஆற்றலையும் தரக் கூடிய கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரிய தினங்களாகும். இந்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு பத்தாவது நாள் மூன்று தேவியரும் பராசக்தியாக எழுந்தருளி மகிஷாசுர அசுரனை வதம் செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. இதனையே விஜயதசமியாக நாம் கொண்டாடி வருகிறோம்.
விஜய தசமி
ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் அன்றைய தினம் துவங்கினால் அந்த வருடம் முழுவதும் அவர்களின் தொழில் சிறப்புடன் நடந்து செல்வ வளமும் பெருகும் என்பது ஐதீகம்.
அவ்வாறு தொழில் செய்யும் இடங்களில் உள்ள பொருட்களுக்கு அன்றைய தினம் பூஜை செய்ய வேண்டும். இதன்போது முதலில் அந்த பொருட்களை தண்ணீரில் கழுவிக் கொண்டு அவற்றுக்கு பால் மற்றும் தண்ணீர் சேர்த்து அபிஷேகம் செய்து அதன் பிறகு சந்தனம் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.
அதன் பின்னர் நாம் தொழில் செய்யும் இடத்தை சுத்தம் செய்து அலங்காரம் செய்து வாழை இலைபோட்டு படையலிட்டு ஆயுதங்களை அவ்விடத்தில் வைத்து தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் முப்பெரும் தேவியரின் அருளும் ஆசியும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.