இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜயசூரிய நாட்டுக்கு வழங்கிய உறுதி!
நாட்டு வீரர்களுக்கு பாரபட்சம் காட்டாது அணிக்கும் நாட்டுக்கும் சிறந்ததை வழங்குவேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இன்றையதினம் (07-10-2024) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே சனத் ஜயசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதற்கு பதிலாக உள்நாட்டு பயிற்சியாளரை நியமிப்பதால் உள்ள நன்மை என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய,
நன்மை என்ன என்றால். எங்களுக்கு இடையிலான தொடர்பாடல் மிகவும் இலகுவாக காணப்படும்.
இதேவேளை, வீரர்களுக்கு காணப்படும் பிரச்சினைகளை என்னிடம் தெரிவித்து, அதனை தீர்த்துக் கொள்ள கூடியதாக இருக்கும். அந்த நம்பிக்கைதான் வேண்டும்.
மேலும், அவர்களுக்கு தெரியும் நான் எவ்வாறான கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன்.
நான் அவர்களுடன் கலந்துரையாடும் விடயங்களின் மதிப்பை அவர்கள் அறிவார்கள். அந்த மதிப்புடன் மற்றைய சிரேஷ்ட வீரர்களின் ஆதரவுடன் எமக்கு முன்னோக்கி செல்ல முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.