யாழ் மாவட்டத்தை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது ; இராசமாணிக்கம் சாணக்கியன்
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செயற்றிறன் அற்ற எம்.பி க்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியை மட்டக்களப்பு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் நிராகரித்தமை போல் உள்ளூராட்சித் தேர்தலிலும் நிராகரிப்பார்கள் என்ற செய்தியை தைரியமாக நாடாளுமன்றில் சொல்லியிருக்கின்றேன்.
மட்டக்களப்பில் அனைத்து சபைகளையும் நாங்கள் கைப்பற்றுவோம். ஆனால் யாழ் மாவட்டத்தை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாண மக்கள் விட்ட தவறை இந்த உள்ளூராட்சித் தேர்தலில் நிவர்த்தி செய்ய வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கு நாடாளுமன்றில் உரையாற்றவே சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. செயற்றிறன் அற்றவர்களாக இருக்கிறார்கள். சிலவற்றை நாடாளுமன்றில் கதைத்தால் எம்.பி. பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்திலும் அவர்கள் உள்ளார்கள் என்றார்.