நம்மை தெய்வீகத்தில் ஆழ்த்தும் சாம்பிராணியை இப்படி தான் செய்கிறார்களா?
மணக்க மணக்க பூஜை செய்யும் பொழுது வரக்கூடிய அந்த வாசம் தெய்வீகத்தை ஏற்படுத்துகிறது. வீடு அல்லது கோவில்களில் இந்த வாசம் நம் மனதை தூய்மைப்படுத்தி இறைவனை உணர செய்கிறது. அத்தகைய இந்த வாசம் காய்ந்த பூக்களில் இருந்து தான் உண்டாகிறது என்று கூறப்படுகிறது.
கம்ப்யூட்டர் சாம்பிராணி
இறைவனை நம்மை மனதால் உணர செய்யக் கூடியது தூப வாசனை, சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி வைத்தால் தெய்வம்சம் நிறையும்.
அப்படிப்பட்ட இந்த சாம்பிராணி இன்று நவீன உலகில் கம்ப்யூட்டர் சாம்பிராணி வடிவில் கிடைக்கப் பெறுகிறது.
விதவிதமாக தயாரிக்கப்படும் இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணி தான் காய்ந்த பூக்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
நிர்மால்யம் ஆன பூக்கள்
வீட்டில் சாமி படங்களுக்கு வைக்கும் பூக்களை நாம் காய்ந்த பின்பு நிர்மால்யம் என்கிறோம். இந்த நிர்மால்யம் ஆன பூக்களை குப்பையில் போடக்கூடாது என்பது சாஸ்திர நியதி ஆகும். எனவே இதை ஏதாவது ஒரு மரம் அல்லது செடிகளில் போட்டு விடுகிறோம்.
இப்படி காய்ந்த இந்த பூக்களை கொண்டே மணம் மிக்க சாம்பிராணி தயாரிக்கப்படுகிறது. வீட்டில் காய்ந்து சருகாகும் பூக்களை சேகரித்துக் கொண்டே வாருங்கள். ஓரளவுக்கு சேர்ந்த பின்பு அதை கைகளால் மொரமொறவென்று நொறுக்கி பிரித்து போடுங்கள்.
பின்னர் ஒரு இதனுடன் ஆறேழு ஏலக்காய்கள், நான்கைந்து கிராம்பு துண்டுகள், சிறிதளவு பச்சை கற்பூரம், சிறிதளவு சோம்பு ஆகியவற்றை நுணுக்கி சேருங்கள்.
வாசனைக்காக உங்களிடம் தெய்வாம்சம் நிறைந்துள்ள பொருட்கள் எது இருந்தாலும் சேர்க்கலாம். தசாங்கம் இருந்தால் அதையும் சிறிதளவு சேர்க்கலாம்.
சேர்க்க வேண்டிய பொருட்கள்
சந்தனம், பிரிஞ்சி இலை போன்றவற்றையும் சேர்க்கலாம். இப்படி அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிதளவு கற்பூரத்தையும் போட்டு இதனுடன் கடைசியாக அரை கைப்பிடி அளவிற்கு தூபம் போடக்கூடிய சுத்தமான சாம்பிராணியை பொடித்து சேர்க்க வேண்டும்.
பின் மிக்சியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து ஈரப்பதம் வர நன்கு கலந்து விடுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணெய், தேன், பன்னீர் போன்றவற்றையும் சேர்க்கலாம். இந்தந்த பொருட்களை தான் சேர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்களிடம் இருக்கும் சில பொருட்களை வைத்தே இப்படி தயாரிக்க முடியும்.
தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான். பின்னர் இதனை நன்கு கெட்டியாக பிடித்தால் பிடிபடும் அளவிற்கு செய்து கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கோன் அல்லது உருளை வடிவங்களில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
கோன் வடிவில் செய்வதற்கு பிளாஸ்டிக் கவர் ஒன்றை கோன் வடிவில் வெட்டி அதை சுருட்டி அதனுள் இந்த கலவையை வைத்து அமுக்கி பின்னர் கவரை பிரித்தால் அழகாக வரும். உருளை வடிவம் கிடைக்க வேண்டும் என்றால் இதே போல பாலிதீன் கவரை கொண்டும் செய்யலாம் அல்லது உங்களிடம் காலியான சிரஞ்ச் இருந்தால் அதற்குள் வைத்து பிரஸ் செய்தால் அழகாக வெளியில் வரும்.
இந்த முறையில் நீங்கள் தயாரித்து நன்கு வெயிலில் இரண்டு நாட்கள் காய விட வேண்டும். காய்ந்த பின்பு எடுத்து நீங்கள் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதிலிருந்து வரக்கூடிய நறுமணம் தெய்வீகத்தை உணர செய்யும். நீங்களும் வீட்டில் இதை செய்து பயனடையுங்கள்.