159 உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கட்சியின் பொதுக்கணக்கில்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களைப் போலவே, ஒரே கணக்கில் வரவு வைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாவது,
நிஹால் கலப்பத்தியினால் தொடங்கப்பட்ட நடைமுறைக்கு அமைவாக தேசிய மக்கள் சக்தியின் இந்த நடவடிக்கை தொடரும். அனைவரின் பணமும் பொரள்ளையிலுள்ள ஒரு கணக்கில் வரவு வைக்கப்படும். இந்நிதி சேவைக்காகப் பயன்படுத்தப்படும்.
'இந்த நிதி மூலம் பொது மக்களுக்கான சேவைத்திட்டங்களை முன்னெடுக்க எமக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
விசேடமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக எந்த வாகனங்களும் இறக்குமதி செய்யப்படமாட்டாது என்றார்.
' நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக வேலை செய்வதற்கு சாதகமான சூழலை உருவாக்கி உள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேலும் தெரிவித்துள்ளார்.