அரசாங்கம் அச்சமடைய வேண்டுமென்றால்... எதிர்க்கட்சிகள் இதை செய்யவேண்டும்!
சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி, உண்மையிலேயே எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்டதா? அல்லது தங்களுடைய முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) தங்கள் மக்கள் பலத்தைக் காண்பிக்க நடத்தப்பட்ட பேரணியா? என முகநூலில் Amirthanayagam Nixon என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் 18-03-2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜே.வி.பி கொழும்பில் நடத்தவுள்ள பேரணி, உண்மையிலேயே எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தா? அல்லது சஜித் பிரேமதசாவின் கட்சியைவிட ஜே.வி.பிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் என்பதை வெளிப்படுத்தவா?
இங்கே, உண்மை என்னவென்றால், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமையில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கம் எதிர்க் கட்சிகளிடம் இல்லை என்பதே. மாறாக ஆர்ப்பாட்ட பேரணிகள் மூலமாகத் தங்கள் மக்கள் செல்வாக்கைப் பரீட்சித்துப் பார்க்கும் போட்டிக் களமாகவே பொருளாதார நெருக்கடி பயன்படுத்துகின்றது.
அத்துடன் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகவுமில்லை. ஒருமித்த கருத்தோடும் இல்லை என்ற தகவலையும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் வெளிப்படுத்துகின்றன.
இந்தப் பேரணிகள் கோட்டபாய ராஜபக்சவுக்குச் (Gotabaya Rajapaksa) சற்று ஆறுதல் தரக்கூடியதே தவிர, பதவி விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற அச்சத்தை அவரிடம் தோற்றுவிக்காது.
பதவி விலக வேண்டுமென்ற சிந்தனைகூட அரசாங்கத்திடம் இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதே அதற்குக் காரணம். எதிர்க்கட்சிகள் கூட்டுப் போராட்டம் ஒன்றை நடத்தினால் மாத்திரமே அரசாங்கம் அச்சமடையும்.
முரண்பாட்டில் உடன்பாடாக எதிர்க்கட்சிகள் கூட்டாகச் செயற்பட்டால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமையில் இருந்து குறைந்த பட்சமேனும் மக்களை விடுவிக்கலாம்? என அவர் தெரிவித்துள்ளார்.