கல்வி மாற்றமா? கல்வி அழிவா? ; அரசாங்கத்திற்கு எதிராக சஜித் பிரேமதாச எச்சரிக்கை
கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் முறைசாரா நடவடிக்கையை ஊக்குவித்து, இந்நாட்டின் இலவசக் கல்வியை சீரழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று (03) கரம்பேத்தர ஸ்ரீ அபயராஜராமய விகாரையில் நடைபெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
C.W.W.கன்னங்கராவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை, நவீன உலகிற்கு ஏற்ப மாற்றமடைய வேண்டும் என்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப புரட்சிகள் வேகமாக இடம்பெற்று வரும் நிலையில், நாமும் அதற்கேற்ப மாறாவிட்டால் பல தசாப்தங்கள் பின்னோக்கி தள்ளப்படுவோம் என அவர் எச்சரித்தார்.
கல்வியில் நவீன தொழில்நுட்பங்களான ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட வேண்டும். அதேவேளை, எமது நாட்டின் கலாசாரம், பண்பாடு மற்றும் விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, வரலாறு ஒரு கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நவீனமயமாக்கல் என்ற பெயரில் கல்வி முறைக்குள் முறைசாரா விடயங்களைப் புகுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.
இது நாட்டின் கலாசாரத்திற்கு முரணானது எனவும், எதிர்கால சந்ததியினரை முழுமையாக அழிக்கும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்விக்காக கோடிக்கணக்கான பணம் ஒதுக்கப்பட்ட போதிலும், இன்று அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களில் இருந்து சில பக்கங்களை கிழித்துவிட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பின்னால் உள்ள சதியை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார். தாம் முன்னெடுக்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டங்களை விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த அவர், இவை வெறும் விநியோகம் அல்ல, நாட்டின் எதிர்காலத்திற்கான சமூக முதலீடு என தெரிவித்தார்.