அரச பெண் அதிகாரி கொலையில் சிக்கிய சஜித் கட்சி வேட்பாளர்!
விவசாய திணைக்கள பெண் அதிகாரி குத்திக் கொலை சம்பவம் தொடர்பில் சஜித் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் டெனி பேபி என அழைக்கப்படும் ஜயவர்தன பத்திரனகே சரத் (வயது 41) என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
தனது நண்பருக்கு அரசு வழங்கும் இலவச உரத்தை பெறுவதற்கான கடிதத்தைக் கொடுக்கவில்லை என கூறி , விவசாய ஆராய்ச்சி உதவியாளரான தீபஷிகா லக்ருவானி விஜேதாசவை கொலை செய்துள்ளார்.
இலவச உரம் பெற்றுக்கொடுக்குமாறு வற்புறுத்து
சந்தேகநபர் தங்காலை பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடற்றொழிலாளியான கொலையாளி, விவசாய ஆராய்ச்சி அதிகாரி தீபஷிகா லக்ருவானி விஜேதாச (30) என்பவரை பல தடவைகள் சந்தித்து, இலவச உரம் பெற்றுக்கொடுக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு விவசாயி என கடிதம் ஒன்றை வழங்க முடியாது என பெண் அதிகாரி மறுத்துள்ளார். எனினும் சந்தேக நபர் விடாக்கண்டான பெண் அதிகாரியின் வீட்டுக்குச் சென்று உரம் எடுப்பதற்காக கடிதத்தை கேட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று (27) காலை விவசாய ஆராய்ச்சி உதவியாளர் தனது மாமியாருடன் அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, சந்தேகநபர் அவரது கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.
வலியால் துடித்த பெண்
கீழே விழுந்த பெண் அதிகாரி வலியால் துடித்தபின்னும் , பலமுறை கழுத்தை அறுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். கத்தி குத்துக்கு இலக்கானவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட எவரையும் அனுமதிக்காமல் , அருகே வருவோரையும் கத்தியால் குத்த கொலையாளி முயன்றதாக போலீசார் மேலும் தெரிவிக்கின்றனர் .
பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரியின் உதவியுடன் கடும் பிரயத்தனத்தின் பின்னர் கொலையாளியை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சந்தேகநபர் இன்று (28) தங்காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பெண் அதிகாரி வசிக்கும் வீட்டிலிருந்து 150 மீட்டர் தொலைவிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சந்தேக நபரின் குடியிருப்புக்கு முன்னால் உள்ள வீதியிலேயே பெண் அதிகாரி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.