சபரிமலை அய்யப்பன் தங்க கிரீடம் மாயம்!
இந்தியா கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்தநிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 (445.76 கிராம்) பவுன் எடை கொண்ட தங்கக் கிரீடம் ஒன்று மாயமாகி உள்ளது.

திருவாபரணங்களின் கணக்கெடுப்பு பணி
தமிழக பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கக் கிரீடத்தை எடுத்துவிட்டு, அதேபோன்ற போலி கிரீடம் வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் உள்ள திருவாபரணங்களின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையிலான திருவாபரணங்களை சரிபார்க்கும் குழு ஆய்வின்போது 55 பவுன் தங்கக் கிரீடத்துக்கு பதிலாக போலி கிரீடம் இருந்தது அம்பலமாகி உள்ளது.
இந்தக் கிரீடம் 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நன்கொடை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள கிரீடம், அசலின் அதே வடிவத்திலும் அளவிலும் உள்ள ஒரு போலிக் கிரீடம் என தெரியவந்துள்ளது. அதில் வைரங்களைப் போன்ற வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
நன்கொடையாக வழங்கப்பட்டபோது அந்தக் கிரீடத்தின் எடையை விட, தற்போது பாதுகாப்பு அறையில் உள்ள போலிக் கிரீடத்தின் எடை குறைவாக இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.
பாதுகாப்பு அறையில் சிசிடிவி கண்காணிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அசல் கிரீடம் எங்கே என்பது விரிவான விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.