புடினின் திட்டம் என்ன? வரிசையாக அணு உலைகளை கைப்பற்றும் ரஷ்யப் படை! திடுக்கிடும் தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா 8 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வரும் நிலையில் உக்ரைனின் மிகப் பெரிய அணு உலை தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை முதல் ரஷ்ய தாக்குதலை நடத்திவரும் நிலையில், இந்த போர் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து பீரங்கி மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற முதல் அமைதிப் பேச்சுவார்த்தையிலும் பெரியளவில் உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இதனிடையே தற்போது உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் தற்போது தாக்குதலைத் தொடங்கியுள்ளது
இதனால் அங்குப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள டினீப்பர் ஆற்றின் அருகே உள்ள சபோரிஜியா நகரில் அமைந்துள்ள உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இருப்பினும், அணுமின் நிலையத்தில் தற்போது வரை வழக்கமான பணிகளே நடைபெற்று வருவதாக ரஷ்யாவின் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே கருத்தைத் தான் உக்ரைன் நாட்டின் அணுசக்தி ஆபரேட்டரும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டில் மொத்தம் 15 அணுசக்தி உலைகள் உள்ள நிலையில், அதில் ஆறு உலைகளை இந்த ஜபோரிஜியா ஆலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அணுஉலை அமைந்துள்ள சபோரிஜியா நகரில் ரஷ்ய ராணுவம் நுழைய விடாமல் அங்குள்ள பொதுமக்கள் சாலைகளை மறித்தாக தகவல் வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செர்னோபில் அணுமின் நிலையம் பழைய தொழில்நுட்பத்தைக் கொண்டது என்பதால், அது பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்யும் வகையில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு நடத்த வேண்டும் என உக்ரைன் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் முக்கிய அணு ஆயுத நிலையங்களை ரஷ்யா வரிசையாகக் கைப்பற்றி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த திங்கட்கிழமை முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னர் தாக்குதல் சற்றே குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாததால், ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.