தீவிர தாக்குதலை நடத்தும் ரஷ்ய படைகள்: அவசர அவசரமாக வெளியேறும் உக்ரைன் மக்கள்
ரஷ்ய துருப்புகளின் தாக்குதல் தீவிரம் அடைந்து வருவதால், உக்ரைனின் இர்பின் நகரில் இருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றிவளைப்பதில் ரஷ்ய துருப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. மரியுபோல் நகரில் தாக்குதல்கள் நீடிக்கின்றன. 17 நாள் போரில் 1,300 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிகப்பெருமளவில் உயிரிழப்புகளை சந்தித்துள்ள ரஷ்யா, தொடர்ந்து புதிய படை வீரர்களை அனுப்பி வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
ரஷ்ய துருப்புக்களால் முற்றுகையிடப்பட்டுள்ள கார்கிவ், மரியுபோல், மைக்கோலைவ், சுமி நகரங்களில் ஓய்வின்றி குண்டுவீச்சு நடத்தப்பட்டது. இந்த நகரங்களில் சிக்கியுள்ள மக்கள் மின்சாரம், உணவு, தண்ணீர் இன்றி அவதிப்படுகிறார்கள்.
ரஷ்யா நடத்தியுள்ள 17 நாள் போரில் 1300 உக்ரைன் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதே நேரத்தில் ரஷ்ய துருப்புகள் 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக மேற்கத்திய தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் ரஷிய துருப்புகளின் தாக்குதல் தீவிரம் அடைந்து வருவதால், உக்ரைனின் இர்பின் நகரில் இருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 18வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான பொதுமக்கள் ஏற்கனவே வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இர்பின் நகரில் இடிந்த வீடுகள், உருக்குலைந்த சாலைகளின் நடுவே பொதுமக்கள் ராணுவ வீரர்கள் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.