உக்ரைன் மிருகக்காட்சிசாலையில் 4000 விலங்களுடன் வசித்து வரும் பணியாளர்கள்!
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதலை ஆரம்பித்தது முதல் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள மிருகக்காட்சி சாலையின் பணியாளர்கள் 4000 விலங்குகளுடன் மிருகக்காட்சி சாலையிலேயே வசித்து வருகின்றனர்.
ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்வதால் உக்ரைன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ள அதேவேளை தலைநகரில் உள்ள மிருகக்காட்சி சாலையின் பணியாளர்ளும் இயக்குநரும் விலங்குகளை பராமரிப்பதற்காக அங்கேயே தங்கியிருக்க தீர்மானித்துள்ளனர்.

அந்த மிருகக்காட்சி சாலையில் 4000க்கும் மேற்பட்ட விலங்குகளும் உயிரினங்களும் உள்ளன. போர் மூண்ட பின்னர் மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கியுள்ளனர்.
அவர்கள் தங்களை மிருகக்காட்சி சாலை இராணுவ குழு என அழைக்கின்றது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. பகல் முழுவதும் நாங்கள் விலங்குகளுடன் இருப்போம், இரவில் ரஷ்யர்களின் தாக்குதல் காரணமாக நாங்கள் பதுங்குழிகளில் தஞ்சமடைகின்றோம் என மிருகக்காட்சி சாலையின் இயக்குநர் கிரில் டிரென்டின் தெரிவித்தார்.

சமீபத்தில் பெரும் மோதல் வெடித்தது படையினர் ஒரு இராணுவ அணியை கைப்பற்ற முயன்றிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். டிரேசர் குண்டுகள் ரவைகள் எல்லா மிருகக்காட்சிசாலையின் எல்லா இடத்திலும் பறந்தன, விலங்குகள் மோதல்கள் காரணமாக கடும் அழுத்தத்தில் உள்ளன என அவர் தெரிவித்தார்.

மறுநாள் காலை எந்த விலங்கிற்காவது காயம் ஏற்பட்டுள்ளதா என நாங்கள் சோதனை செய்தோம், எவருக்கும் காயமில்லை எவரும் இறக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
பறவைகள் சில அச்சமடைந்து தங்கள் கூடுகளிற்குள் இருந்து வெளியேற முற்பட்டதால் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இராணுவ நடவடிக்கைகள் காரணமாக விலங்குகள் சில அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதால் சிலவற்றை உட்புற மூடப்பட்ட பகுதிகளிற்கும் நிலத்தடி காட்சியகங்களிற்கும் பணியாளர்கள் மாற்றியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.