கீவ் - கார்கிவ்வில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் உக்ரைன் மக்கள்! எதற்காக தெரியுமா?
தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போரிடுவதற்காக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை நீண்டவரிசையில் நின்று உக்ரைன் மக்கள் வாங்கி செல்வதாக தெரிய்வந்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது 7-வது நாளாக ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் குண்டுமழைகளை பொழிந்து வருகிறது.
இதேவேளை, ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், உக்ரைன் ராணுவத்தின் பலம் மிகக் குறைவாக உள்ளது.

இதனால் தங்கள் நாட்டு மக்களை ரஷ்ய ராணுவத்தினருடன் போரிடுமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று, ஆயிரக்கணக்கான மக்கள் துப்பாக்கி ஏந்தி ரஷ்யப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், ல்வைவ் ஆகியவற்றில் உள்ள ஆயுதங்கள் விற்பனை மையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மக்கள் துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி செல்கின்றனர்.

சாதாரண ரக துப்பாக்கி முதல் நவீன ரக இயந்திரத் துப்பாக்கிகள் வரை இந்த மையங்களில் விற்கப்படுகின்றன. அதன் தரத்துக்கேற்ப அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து கார்கிவில் வெப் டிசைனராக பணியாற்றும் இளைஞர் ஒருவர் கூறும்போது, "உக்ரைனுக்கு உறுதுணையாக எந்த நாடும் நிற்கவில்லை. ரஷ்ய படையினரின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டே செல்கிறது.
இப்போது நாங்களும் உயிருக்கு பயந்து ஓடினால், எங்கள் நாட்டை ரஷ்யா கைப்பற்றிவிடும். அது ஒருபோதும் நடக்கக் கூடாது. அதனால்தான், நாங்கள் ஆயுதங்களை ஏந்தி போரிட்டு வருகிறோம்" என்றார்.