பேஸ்புக் செயலிக்கு அதிரடியாக தடை விதித்தது ரஷ்யா
ரஷ்யாவில் பேஸ்புக் செயலியின் பயன்பாட்டிற்கு அதிரடியாக அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
10வது நாளாக உக்ரைனை ரஷ்யா தாக்கி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. மோதல்களில் பலர் இறந்தனர். இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக சமூகம் கண்டனம் தெரிவித்தது. உக்ரைனின் தலைநகரான கியேவை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறுவதைத் தடுக்க உக்ரைன் பாதுகாப்புப் படையினர் முயற்சித்து வருகின்றனர்.
இருப்பினும், ரஷ்யப் படைகள் தொடர்ந்து தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை ஆக்கிரமித்தன. இதனிடையே உக்ரைனில் நடைபெற்று வரும் சிறப்பு ராணுவ நடவடிக்கை (போர்) குறித்து முகநூலில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டன.
குறிப்பாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில், ரஷ்ய அரசு நடத்தும் செய்தி நிறுவனங்கள் உக்ரைன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி செய்திகளை வெளியிடுகின்றன. இதன் விளைவாக, ரஷ்யா டுடே மற்றும் ஸ்புட்னிக் போன்ற ரஷ்ய அரசு நடத்தும் ஊடகங்களை ஐரோப்பாவில் ஒளிபரப்புவதை பேஸ்புக் முடக்கியது.
இந்நிலையில் ரஷ்ய அரசு பேஸ்புக் செயலிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. செய்தி நிறுவனங்களுக்கு எதிரான பாரபட்சம் காரணமாக ரஷ்யாவில் பேஸ்புக் செயலியை தடை செய்வதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.