10 பெண் பிள்ளைகள் ஆண் வாரிசுக்காக அரங்கேறிய ஆபத்தான பிரசவம்
ஹரியானா மாநிலத்தில் 10 பெண் குழந்தைகளைத் தொடர்ந்து, 19 ஆண்டு கால காத்திருப்பிற்குப் பின் ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அபாயகரமான 11-வது பிரசவம் ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள உசானா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 37 வயது பெண்மணி ஒருவர் தனது 11-வது குழந்தையைப் பிரசவித்தார். ஏற்கனவே 10 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மகனுக்காக ஏங்கிய குடும்பம்
குழந்தையின் தந்தை சஞ்சய் குமார் (38), ஒரு கூலித் தொழிலாளி. 2007-ல் திருமணமான இவருக்கு 10 பெண் மகள்கள் உள்ளனர்.
இது குறித்து அவர் கூறுகையில்: "எங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. எனது மூத்த மகள்களும் தங்களுக்கு ஒரு தம்பி வேண்டும் என விரும்பினார்கள். கடவுளின் விருப்பப்படி இப்போது மகன் பிறந்துள்ளான். எனது வருமானம் குறைவு என்றாலும், அனைத்து மகள்களையும் படிக்க வைத்து வருகிறேன். மூத்த மகள் இப்போது 12-ஆம் வகுப்பு படிக்கிறாள்."
சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோவில், தந்தை சஞ்சய் குமார் தனது 10 மகள்களின் பெயர்களைச் சொல்ல முடியாமல் திணறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்தச் சம்பவம் மகிழ்ச்சியாகப் பார்க்கப்பட்டாலும், ஆண் குழந்தைக்காக ஒரு பெண் 11 முறை பிரசவத்தைச் சந்தித்தது ஆரோக்கியம் மற்றும் சமூகப் பார்வையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.