இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; மழையுடனான காலநிலையால் அதிகரிக்கும் அபாயம்
நாட்டில் நிலவும் பருவப்பெயர்ச்சி மழையுடனான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை சுமார் 7,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

எலிக்காய்ச்சல்
எலிக்காய்ச்சல் காரணமாக வருடாந்தம் சுமார் 300 பேர் உயிரிழப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலான எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். எலிக்காய்ச்சல் என்பது பக்டீரியா தொற்றினால் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு நோயாகும்.
குறிப்பாக, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாகக் காணப்படுவதால், அவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், காய்ச்சல், தலைவலி, தசை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது