அரிசி மாபியா விவகாரம் ; நிர்ணய விலைக்கு மேல் விற்றால் கடும் நடவடிக்கை
அரிசி மாபியா தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.காதர் மஸ்தான் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விகளுக்கு வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க பதில் வழங்கினார்.
அந்தவகையில், நாட்டு மக்களின் வருடாந்த அரிசி தேவை 2.7 மில்லியன் மெற்றிக்தொன்னாகும். அதில் வீட்டுத் தேவைக்காக 2.4 மில்லியன் மெற்றிக்தொன் அரிசியும், கைத்தொழில் துறைக்காக 0.3 மில்லியன் மெற்றிக்தொன் அரிசியும் தேவைப்படுகிறது.
அதேநேரம் உள்நாட்டு அரிசி உற்பத்தி காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. கடந்த சிறுபோகத்தில் உத்தேசிக்கப்பட்ட அரிசி விளைச்சலை விட, அறுவடை செய்யப்பட்ட நெல்லின் அளவு குறைவடைந்துள்ளது.

எனவே ஓரளவு தட்டுப்பாடு நிலை காணப்படுகிறது எனத் தெரிவித்தார். மேலும், கீரி சம்பா உள்ளிட்ட சில அரிசி வகைகளுக்கு மேற்கொள்ளப்படும் விலைகள் தொடர்பில் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வருகிறது.
சில அரிசிகளுக்கான விலைமனு கோரலின் போது, கீரி சம்பா அரிசி சந்தைக்கு நிரம்பல் செய்யப்படவில்லை. இதனால் ஒக்டோபர் மாதம் முதல் கீரி சம்பா அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அத்துடன், அரிசி விலையை நுகர்வோர் அறிந்து கொள்ளும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விற்பனையாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், கொள்வனவாளர்கள், விநியோகஸ்தர்கள், நுகர்வோர் என அனைத்து தரப்பினரும் விலை தொடர்பில் அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நிர்ணய விலைக்கு மேலதிகமான விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.