அரிசி சந்தைக்கு விநியோகம் ; அமைச்சரவை வழங்கிய முக்கிய தீர்மானம்
நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (16) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 6,000 மில்லியன் ரூபாய்கள் நிதிப் பங்களிப்பைப் பயன்படுத்தி, நெல் சந்தைப்படுத்தல் சபை கடந்த சிறு போகத்தில் கொள்வனவு செய்த நெல் இருப்பு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தொடர்ச்சியான அரிசி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, இந்த நெல் இருப்பு 2025 ஆம் ஆண்டில் நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் அரிசியாக்கப்பட்டு, லக் சதொச மற்றும் கூட்டுறவு வலையமைப்பின் மூலம் சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் தீர்மானத்தை எடுப்பதில், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரும் இணைந்து சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.