ரெட்டாவின் கணக்குக்கு வந்த ரூ. 50 இலட்சம்; சி.சி.டி. விசாரணையில் வெளியான தகவல்
மக்கள் தன்னெழுச்சி போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான ரெட்டா என பரவலாக அறியப்படும் ரனிந்து சேனாரத்னவின் வங்கிக் கணக்குக்கு, 50 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்ட நபரை சி.சி.டி. விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கல்கிசை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு குறித்த பணத் தொகையை வைப்பிலுட்டுள்ளதாக தெரிவித்த விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர், குறித்த நபரிடம் வாக்கு மூலம் ஒன்றினை நேற்று ( 18) பதிவு செய்துகொண்டதாக குறிப்பிட்டனர்.
பொலிஸாரிடம் வாக்குமூலம்
இதன்போது, தான் 15 மில்லியன் ரூபா வைப்பொன்றினை முன்னெடுக்க முயன்ற வேளையில் தவறுதலாக ரெட்டாவின் வங்கிக் கணக்குக்கு 5 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக குறித்த நபர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் குறித்த அதிகாரி கூறினார்.
இந்த பண வைப்பு விடயம் தொடர்பில் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந் நிலையில், இது தொடர்பில் தனது வங்கிக் கணக்கு உள்ள தனியார் வங்கிக்கும் பொலிஸாருக்கும் ரெட்டா எனும் ரனிந்து சேனாரத்ன முறைப்பாடளித்ததை அடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீர் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று முன் தினம் (17)அறிவித்துள்ளது.
ரெட்டா எனும் ரனிந்து சேனாரத்னவின் குறித்த வங்கிக் கணக்கு, ஜா எல கிளையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நீர் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு பீ அறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.