இலங்கையில் பெரும் சோக சம்பவம்: தாயை தேடி தவித்த இரு பிள்ளைகள் சடலமாக மீட்பு
பதுளை மாவட்டம் - போகொட பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களும் இன்றைய தினம் (24-03-2023) முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் ஹாலி - எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 10 வயது அண்ணனும், 8 வயது தங்கையுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
போகொட கொட்டியாமலுவ பிரதேசத்தில் நேற்று (23-03-2023) மாலை கடும் மழை பெய்த போது தமது வீட்டில் இருந்து, வடிகானுக்கு அப்பால் உள்ள வீடொன்றுக்கு தாய் சென்றிருந்ததால் அவரை அழைத்து வருவதற்காக சென்ற வேளையிலேயே குறித்த சிறுவர்கள் இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வடிகானை கடப்பதற்கு முற்பட்டவேளை, வடிகானில் நீர் அதிகளவில் வந்தமையால் அவர்கள் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு சிறுவர்களும் போகொட வித்தியாலயத்தில் தரம் ஐந்து மற்றும் தரம் இரண்டில் கல்வி பயின்று வந்துள்ளனர்.
ஹாலிஎல பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இராணுவமும் வரவழைக்கப்பட்டது.
சிறுவர்களின் தந்தை கொழும்பில் தொழில் புரிந்து வருவதுடன் குறித்த சிறுவர்கள் இருவரும் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இன்று காலை தங்கையின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், முற்பகல் அண்ணனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹாலி –எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.