எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை
நாளை டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய எரிபொருள் கையிருப்பு தொடர்பில் தகவல் வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சுமார் 32,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.

ஐந்தாம் மாதம் முடியும் வரை இலங்கையில் எரிபொருள்
5,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல, எதிர்வரும் 6 ஆம் 7ஆம் திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளன. அதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நாங்கள் எதிர்பார்த்த அனைத்துக் எரிபொருள் கப்பல்களும் நாட்டை வந்தடையும்.
கடந்த மாதமும் எதிர்பார்த்த அனைத்துக் கப்பல்களும் நாட்டை வந்தடைந்தன. எனவே, பண்டிகைக் காலம் முடிந்து ஐந்தாம் மாதம் முடியும் வரை இலங்கையில் எரிபொருள் கையிருப்பில் இருக்கும்.
எனினும், எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் அதனை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.