மட்டக்களப்பு பாடசாலைகளில் வெள்ளைக்கொடிகளை பறக்கவிடுமாறு கோரிக்கை!
ஆசிரியர்,அதிபர்கள் போராட்டத்தின்போது திடீரென உயிரிழந்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வெள்ளைக்கொடிகளை பறக்கவிடுமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர்,அதிபர்கள் போராட்டத்தின்போது மயங்கிவீழ்ந்து உயிரிழந்த தெனியாய மத்திய கல்லூரி ஆரம்பபிரிவு ஆசிரியை ஏ.டி.வருணி அசங்கவுக்கு இன்று மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது உயிரிழந்த ஆசிரியையின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செய்யப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தவராஜா கோகுலரமணன்,செயலாளர் கிருமைராஜா,மட்டக்களப்பு வலய இணைப்பாளர் திருமதி தயானந்தி தனரூபன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தவராஜா கோகுலரமணன்,
அதிபர்,ஆசிரியர்களின் 24வருட சம்பள முரண்பாட்டினை நீக்கும் வகையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஆசிரியர்கள்,அதிபர்கள் ஒன்றிணைந்த வகையில் பாரிய போராட்டங்களை அதனடிப்படையில் அரசாங்கம் ஒரு இணக்கப்பாட்டிற்குவந்துள்ளது.
சுபோதினி அறிக்கையின்படி மூன்றில் ஒரு பங்கினை தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. வழமையான வரவு செலவுத்திட்டத்தினை விட 30ஆயிரம் மில்லியனை மேலதிகமாக அரசாங்கம் ஒதுக்கீடுசெய்துள்ளது.
எனினும் மீதியான இரு மடங்கினையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இதுவரையில் அதிபர்கள்,ஆசிரியர்கள் எங்களது போராட்டங்களுக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினார்களோ அதேபோன்று எதிர்காலத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாத சந்தர்ப்பத்தில் எங்களோடு கைகோர்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்ட அதிபர்கள்,ஆசிரியர்கள்.ஆசிரிய ஆலோசகர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த ஆசிரிய போராட்டத்தில் கலந்துகொண்டு தனது உயிரை தியாகம் செய்த வருணி ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வெள்ளைக்கொடிகளை பறக்கவிடுவதுடன் , ஐந்து நிமிடங்கள் அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் கூறினார்.