திருகோணஸ்வரர் ஆலயம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
ஈழத்தின் புகபெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான பகுதியை ஆக்கிரமித்து ஆலயத்திற்கு செல்லும் வழியின் இருமருங்கிலும் கடைத்தொகுதிகள் அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் ஆலய திருப்பணி வேலைகள் முன்னெடுப்பதற்கு திணைக்களம் இடையூறு விளைவித்து வருவதாகவும் இது தொடர்பாக உரிய தீர்வினை பிரதமர் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத்தர வேண்டும் என்றும் அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்,
ஆலயத்திற்கு செல்லும் வீதியின் இருமருங்கிலும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்களால் உத்தரவுகள் இன்றி தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் புகார் செய்த போதிலும் எவ்வித பலனும் கிட்டவில்லை.
தற்போது குறித்த பாதைக்கு அருகில் நிரந்தர கட்டடம் அமைக்க தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதுடன் ஆலயம் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திணைக்களம் ஆலய திருப்பணி வேலைகளையும் திணைக்களம் தடுத்து வருகிறது. இந்திய அரசாங்கத்திடம் ஆலய திருத்த பணிகளுக்கு நிறைவேற்றித் தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு சாதகமாக அமைய உள்ள நிலையில் திட்டமிட்டு ஆலய சுற்றாடலை அபகரிக்கும் நோக்கில் நிரந்தர தடைகளை கட்டுவதற்கு முன்வந்துள்ளனர்.
இவ்விடயத்தை கருத்தில்கொண்டு சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆலய திருத்த பணிகளை மேற்கொள்ளவும், நிர்மாணிக்கப்பட்டுள்ள வாணிப கட்டிடங்களை தடுத்து நிறுத்தவும், தொடர்ச்சியாக ஆலய திருப்பணிகள் முன்னெடுப்பதற்கு கௌரவ பிரதமர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.