ரஷ்ய படைகளில் போரிடும் இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!
ரஷ்ய துருப்புகளுடன் இணைந்து செயற்படும் இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இலங்கை ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் லெவன் ட்ஜகாரியனுடன் கொழும்பில் நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து 'X' இல் இராஜாங்க அமைச்சர் இதனை பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, போரின் முன்னணிப் பகுதிகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டாம் என அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்படி, ஜூன் 5-7 ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கையின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ரஷ்ய உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியதாகவும், அந்த இலக்கத்திற்கு இதுவரை 455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி 16 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 26 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்