பாகிஸ்தானில் மதவாதிகளின் வெறியாட்டம்; இலங்கையர் தொடர்பில் வெளியான பகீர் தகவல்
பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கொல்லப்பட்வர் கனேமுல்லை – வெலிபிஹில்ல பகுதியைச் சேர்ந்த, பிரியந்த குமார தியவடன என்ற குறித்த நபர், 11 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் க்ரசண்டி டெக்ஸ்டைல் என்ற ஆடைத் தொழிற்சாலையில், கைத்தொழில் பொறியியல் முகாமையாளராக பணியில் இணைந்ததுள்ளார்.
அதன் பின்னர் 2012 இல் சியல்கோட்டில் உள்ள ராஜ்கோ என்ற தொழிற்சாலையில் பொது முகாமையாளராக பணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் தமது தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த மதசார் பதாகை ஒன்றை அவர் அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து , இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் இம்ரான்கான் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சியால்கோட்டில் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் இலங்கையை சேர்ந்த மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் காரணமாக, இன்றைய நாள் பாகிஸ்தானிற்கு அவமானகரமான நாளாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் நாடாளுமன்றில் தங்களது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
மேலும், சபை முதல்வர் தினேஷ் குணவர்தனவும் சபாநாயகரும் இணைந்து கலந்துரையாடி, இந்த விடயத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றுக்கு கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்; 100 பேர் கைது