வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் குறைப்பு ; பயணிகள் அசௌகரியம்!
வடக்கு ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் தினசரி ரயில் சேவைகளின் எண்ணிக்கை 18இல் இருந்து வெறும் 8ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
‘தித்வா’ புயலுக்கு முன்பு வடக்கு ரயில் மார்க்கத்தில் 18 தினசரி ரயில் சேவைகள் இயக்கப்பட்ட போதிலும், தற்போது அந்த எண்ணிக்கை 8ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர தெரிவித்தார்.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு அஞ்சல் ரயில்கள்
குறிப்பாக புதன்கிழமைகளில், வழக்கமான பயணிகளுக்கு மிகக் குறைந்தளவிலான போக்குவரத்துத் தெரிவுகளே இருப்பதாகவும், பிற திட்டமிடப்பட்ட சேவைகளைத் தவிர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு அஞ்சல் ரயில்கள் மட்டுமே இயங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘யாழ் தேவி’ கடுகதி ரயிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயங்குவதால், யாத்திரை மற்றும் பயணிகர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையை பதுளை, மாத்தளை, கண்டி மற்றும் ஹட்டன் ஆகியவற்றுடன் இணைக்கும் மார்க்கங்களில் முன்னர் தினசரி இயக்கப்பட்ட பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகள் 42இல், தற்போது 8 சேவைகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், மீதமுள்ள 34 சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் கம்பளை வரை ரயில் சேவைகள் மீளத் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, மலையக ரயில் மார்க்கத்தில் சாதாரண சேவைகளை வழமைக்குக் கொண்டுவருமாறு சங்கம் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என கசுன் சாமர ஜெயசேகர மேலும் தெரிவித்தார்.