விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
சிலாபத்திலிருந்து கல்பிட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த "சிவப்பு" மட்ட எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை (08) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், ஞாயிற்றுக்கிழமை (09) காலை 8.30 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, சிலாபத்திலிருந்து கல்பட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் பலத்த காற்ற வீசுவதுடன் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, மறுஅறிவித்தல் வரும் வரை இந்தச் கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையிலான, மற்றும் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கூறிய கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் அவதானத்துடன் இருக்குமாறும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் உன்னிப்பாகக் கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.