இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கும் தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதிக மழை பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோ மீற்றராகக் காணப்படும் ம் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை கடந்த 21 ஆம் திகதி முதல் நிலவும் சீரற்ற காலநிலையால் கடும் காற்று மின்னல் தாக்கத்தின் காரணமாக முல்லைத்தீவு, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.