நுவரெலியாாவில் போதைப்பொருள் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட இரசாயனங்கள் மீட்பு
கெஹெல்பத்தர பத்மேவினால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட ஐஸ் தொழிற்சாலையில், போதைப்பொருள் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தொகை இரசாயனங்களை மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மித்தெனிய பகுதியில் ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது இரண்டு கொள்கலன்களில் கொண்டு வரப்பட்ட இந்த இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நடத்தும் இந்த போதைப்பொருள் தொழிற்சாலை நுவரெலியாவில் இருப்பதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.
நுவரெலியாவில் ஒரு வாடகை வீட்டில் இந்த தொழிற்சாலை நடத்தப்படுவதாகத் தகவல் இருப்பதாக அவர் கூறினார். இதற்காக கெஹெல்பத்தர பத்மே சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான சுமார் 2000 கிலோ இரசாயனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த இரசாயனங்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அதன்படி, விசாரணைகளைத் தொடங்கிய மேற்கு வடக்கு குற்றப்பிரிவுக்கு, கெஹெல்பத்தர பத்மே இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் ஒரு தொகை இரசாயனங்கள் மித்தெனியப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது.
அந்தப் பிரிவின் உதவி காவல் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல மற்றும் பிரதான காவல் பரிசோதகர் லிண்டன் டி சில்வா உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு மித்தெனியப் பகுதிக்குச் சென்றனர்.
மித்தெனிய-எம்பிலிப்பிட்டிய வீதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இரசாயனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கொள்கலன்கள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டன.
பத்மேவின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இரசாயனப் பொருட்களைப் புதைத்திருப்பது மேலும் விசாரணையில் தெரியவந்தது.
அதன்படி, குறித்த இடத்தை தோண்டி, இரசாயனப் பொருட்களை மீட்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இரண்டு கொள்கலன் பாரவூர்தியிலும் சுமார் 50,000 கிலோ இரசாயனங்கள் இருந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.