இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 20 இலட்சத்து 23 ஆயிரத்து 470 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 454,959 ஆகும்.

சுற்றுலாப் பயணிகள்
அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 184,926 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருற்து 150,243 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 117,755 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 126,937 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 99,001 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 90,891 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, இவ்வாண்டின் நவம்பர் மாதத்தின் முதல் 19 நாட்களில் 132,783 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.