வடக்கு, கிழக்கு வீதிகளை புனரமைப்பு; அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி சமகால அரசால் கிராமிய வீதி அபிவிருத்தி செய்தல் அரசின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய பணியாக அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், வீதியைப் புனரமைப்புச் செய்தல், நிர்மாணித்தல் மற்றும் பராமரிப்பதற்காக விரிவான அணுகுமுறை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலைமையில் காணப்படுகின்றது. ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1,500 கிலோ மீற்றர்கள் வடமாகாணத்திலும் மற்றும் 500 கிலோ மீற்றர்கள் கிழக்கு மாகாணத்திற்கும் முன்னுரிமை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்காக வீதிகளைத் தெரிவு செய்வதற்காக பொதுமக்கள், நிதியனுசரணை வழங்குகின்ற அமைப்புக்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பங்கேற்பைப் பெற்றுக் கொள்வதுடன், விதந்துரைக்கப்பட்டுள்ள வீதிகளின் பட்டியலுக்கு மற்றும் குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.