திரிபோஷா தொடர்பில் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை
திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது விசேட ஒரு விடயம் தொடர்பாகவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.
அரசாங்கமானது ஆட்சிக்கு வந்து முதலாவதாக வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாகவே நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இதனை திடீரென வெளியிட்ட ஒரு வர்த்தமானி அறிவித்தலாக கருதிவிட முடியாது.
2024 செப்டம்பர் 27 ஆம் திகதியிடப்பட இந்த வர்த்தமானியில், குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இணங்க வரையறுக்கப்பட்ட திரிபோஷா நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரிபோஷா என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான போஷாக்கு திட்டம் என்றால் அது மிகையாகாது.
திரிபோஷா திட்டத்தை இல்லாமல் செய்ய கடந்த காலத்திலிருந்து பலர் முயற்சி செய்து வருகிறார்கள்.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு பிழையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது.
இதுதொடர்பாக அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் இவ்வாறு ரவிகுமுதேஷ் தெரிவித்துள்ளார்.