இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை!
இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளினால் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றிரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இறைச்சிக் கடையில் பணிபுரிந்த 40 வயதுடைய நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இரத்மலானையில் உள்ள அராலிய வீடமைப்பு வளாகத்தில் வசிக்கும் அனுர தேசப்பிரிய அல்லது ‘கலுவ’ என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் அல்லது சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.