வீடொன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிய உயிரினம்
மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள், நேற்று இரவு மன்னார் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த கடலாமைகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் கீழ், மன்னார் - எழுத்தூர் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது வீட்டின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அரிய வகை பேராமை இனத்தை சேர்ந்த கடல் ஆமைகள் 05 மீட்கப்பட்டன. எனினும், அவ்வீட்டில் சந்தேகநபர்கள் எவரும் இருக்கவில்லை.
அதேசமயம் மீட்கப்பட்ட ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோகிராம் எடை கொண்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸாரின் மேலதிக சட்ட நடவடிக்கைகளின் பின்னர் கடலாமைகளை கடலில் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
